நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.
முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங்கரையில் இருந்த தென்மதுரைத் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் கோநகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோநகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.
சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்கள் உடையவர்களாய் இருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்த்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது.
முத்தும் இரத்தினமும் ஏற்றுமதி செய்து - அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து - இலக்கண இலக்கியங்களைப் பெருக்கி இந்த நகரை உலகெலாம் புகழ் பெறச் செய்த முதல் பாண்டிய மன்னன் வெண்தேர்ச் செழியன். பாண்டியர்களின் தேர்ப்படை, இவன் காலத்தில் அற்புதமாக வளர்ந்து உருவாக்கப்பட்டது. வெண்முத்துக்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசும் பிரகாசமான ரதங்களில் வெள்ளை மின்னல்கள் போலும் ஒளிமயமான பல புரவிகளைப் பூட்டி இவன் அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப் பின்னாளில் இலக்கிய ஆசிரியர்கள் 'வெண்தேர்ச் செழியன்' என்று சிறப்புப் பெயரளிக்கக் காரணமாயிருந்தது. கபாடபுரம் என்ற நகரைப் பொருத்தமான இடத்தில் உருவாக்கிய பெருமையும் தேர்ப்படையை வளர்த்த பெருமையும் வெண்தேர்ச் செழியனையே சேரும். இவ்வரசன் கபாடபுரத்தில் அமைத்த தமிழ்ச் சங்கமாகிய இடைச் சங்கத்தில் ஐம்பத்தொன்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் இருந்தனர். நூலாராய்ந்தனர். கவியரங்கேறினர்.
வெண்தேர்ச் செழியன் அழகிய பொருநை நதி நகரைத் தழுவினாற் போல வந்து கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இந்த நகர் மிகப் பொலிவாக அமையும்படி உருவாக்கியிருந்தான். கபாடபுரத்தில் முத்துக் குளித்தலும் இரத்தினம் முதலிய மணிகளை எடுத்துப் பட்டை தீட்டி உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தலும் நிகழ்ந்து வாணிகத்தைப் பெருக்கின. ஹாங்காங்கையோ, சிங்கப்பூரையோ, பம்பாயையோ, மனக்கண்ணில் நினைத்துக் கொண்டு அவற்றை விடப் பெரியதும், பொலிவு நிறைந்ததும் ஆனதோர் சரித்திர காலப் பெருநகரைக் கற்பனை செய்ய முயலுங்கள்! உங்கள் கற்பனை மனக் கண்ணில் வெற்றிகரமாக உருவானால் அந்தப் பெரிய கற்பனை தான் அன்று கபாடபுரமாயிருந்தது. அத்தகைய பெருமை வாய்ந்த கபாடபுரத்தில் இரத்தினக் கற்களைத் தோண்டி எடுக்கும் இரத்தினாகரங்களில் (இரத்தினச் சுரங்கம்) பல நாட்டினர் வந்து உழைத்தனர். எக்காலமும் ஆண்களும், பெண்களுமாக அந்த இரத்தினாகரங்களைப் பார்க்க வருவோர் கூட்டம் மிகுந்திருக்கும். முத்துக்குளிக்கும் துறைகளிலும் அதே கூட்டமிருக்கும்.
கூடை கூடையாகப் பட்டை தீட்ட அள்ளிக் கொண்டு போகப்படும் இரத்தினக் கற்களைப் பார்ப்போர் மனம் ஆசைப்படும் - தன் நாட்டில் விளைபவை அவை என்று பெருமையும்படும். கபாடபுரத்தின் துறைமுகத்தில் பல நாட்டுக் கப்பல்கள் வருவதும் போவதுமாக எப்போதும் பெருங் கலகலப்பு நிறைந்திருக்கும். சுங்கச் சாவடிகளில் அடல்வாள் யவனர் காவலுக்கு நின்றிருப்பர். இசை மண்டபங்களிலே பண்ணொலிக்கும். ஆடலரங்குகளிலே அவிநயம் அழகு பரப்பும். சங்கங்களிலே தமிழிலக்கண இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழும். இத்தகைய வெற்றித் திருநகரை உருவாக்கிய வெண்தேர்ச் செழியனின் தள்ளாத முதுமைக் காலத்தில் அவன் மகன் அநாகுல பாண்டியன் பட்டத்துக்கு வந்த பின் இந்தக் கதை தொடங்குகிறது.
ஆண்டுதோறும் வசந்த காலத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாளன்று கபாடபுரத்தை நிறுவிய வெண்தேர்ச் செழிய மாமன்னர் அந்த மாநகர் உருவான ஞாபகத்தைக் கொண்டாட விரும்பி ஒரு நகர்மங்கல விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆண்டுதோறும் அவர் நிகழ்த்தியதைவிட நன்றாக - அவர் கண்காணவே இன்னும் சிறப்பாக - இந்த நகர்மங்கலத்தைக் கொண்டாடி வந்தான் அநாகுலன். முத்துக் குளியலும், இரத்தினாகரங்களில் மணி குவித்தலும் சிறப்பாக நடைபெறும் காலமும் இந்த வசந்த காலமேயாகையினால் கபாடபுரத்தில் பல நாட்டு மக்களும் கூடுகிற மாபெரும் விழாக்காலம் இதுதான். இனி வாருங்கள் கபாடபுரத்தின் இந்த நகரணி மங்கல நாளில் நாமும் அங்கு போகலாம். கபாடபுரத்தைக் கண் குளிரக் கண்டு மகிழலாம்.
Título : கபாடபுரம்
EAN : 9798224945139
Editorial : Mayuraa
El libro electrónico கபாடபுரம் está en formato ePub
¿Quieres leer en un eReader de otra marca? Sigue nuestra guía.
Puede que no esté disponible para la venta en tu país, sino sólo para la venta desde una cuenta en Francia.
Si la redirección no se produce automáticamente, haz clic en este enlace.
Conectarme
Mi cuenta